லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பிரச்னையை சுமூகமாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக இரு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் சில நாட்களில் லடாக்கின் சூஷுல் பகுதியில் சந்தித்து பேசவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய - சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் இடையே நேற்று (புதன்கிழமை) நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பேட்ரோலிங் பாயின்ட் 14 (கால்வான்), பேட்ரோலிங் பாயின்ட் 15 (114 பிரிகேட்), பேட்ரோலிங் பாயின்ட் 17 (ஹாட் ஸ்பிரிங்) ஆகிய பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ராணுவ துணை தளபதி ஹரிந்தர் சிங், சீன மேஜர் ஜெனரல் லியு லின் இடையே கடந்த ஆறாம் தேதி மோல்டூவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவமும் கால்வான் நாலா, பிபி-15, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் 2 - 2.5 கி.மீ. தூரம் வரை பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாமியார் மருமகள் தகராறு: மகனை கொலைசெய்த தாய்!