எல்லை விவகாரம் குறித்து ஆலோசிக்க இரு நாடுகளை சேர்ந்த உயர் மட்ட அலுவலர்கள் நேற்று (ஜூலை 10) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிழக்கு லடாக் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தமது படைகளை முழுவதுமாக திரும்பபெற இந்தியா, சீனா ஒப்புக் கொண்டன. இரு நாட்டு எல்லை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான செயல் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்காக எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது அவசியமாகிறது என அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரும், சீனா சார்பில் வெளியுறவு அமைச்சக எல்லை மற்றும் பெருங்கடல் துறையின் நிர்வாக இயக்குநரும் பேச்சுவார்த்தை கலந்து கொண்டனர்.
ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை மேற்கு எல்லை பகுதியில் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து இப்பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு உயர் மட்ட ராணுவ அலுவலர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது அவசியமாகிறது என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒப்பு கொண்டது. இதனிடையே, கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும், வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக, அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவந்தது.
பதற்றத்தை குறைக்கும் நோக்கில், உயர் மட்ட ராணுவ அலுவலர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.
இதையும் படிங்க: பீகாரில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை