மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மனதின் குரல் எனும் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 30) உரையாற்றிய பிரதமர் மோடி, "இது பண்டிகைகளுக்கான நேரம். இயற்கையுடன் நமது பண்டிகைகளுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தங்கள் திருவிழாக்களில் கட்டுப்பாடுகளையும் எளிமையையும் கடைபிடித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டில் இந்தியா தனது 75 ஆண்டுகால சுதந்திரத்தை நிறைவு செய்யும். சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான வீரர்களின் பங்களிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். உலகளாவிய பொம்மை தொழில் ரூ. 7 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் அதில் இந்தியாவின் பங்கு மிகச் சிறியது. இந்த வர்த்தகத்தை அதிகரிக்க உழைக்க வேண்டியது மிக அவசியம்.
மேலும், உள்ளூர் பொம்மை உற்பத்திக்கு குரல் கொடுப்பதற்கான நேரம் இது. அதுமட்டுமின்றி, கணினி விளையாட்டுகளை உருவாக்க இளம் தொழில்முனைவோர்கள் முன்வரவேண்டும்" என்றார்.