குடியரசு தினத்தை முன்னிட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிறகு, பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போல்சனாரோ, "இருநாடுகளுக்கும் இடையே பல (15) முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஒரே சமயத்தில் இத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது எங்கள் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதன்மூலம், இந்தியாவுடனான இருதரப்பு உறவு மேலும் வலுபெறும்.
பிரேசிலும், இந்தியாவும் ஒரே மாதிரியான பொருளாதாரத்தைக் கொண்டு விளங்கின்றன. இருநாடுகளும் இணைந்து செயல்பட்டால் உலகின் 10 மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னுக்குச் செல்லும்" என்றார்.
முடிவில், "இரண்டு நாள்களில் இந்தியாவில் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவேன். ஆனால் இப்போது இந்தியாவை ரொம்ப மிஸ் பண்றேன்" என மகிழ்ச்சியுடன் கூறினார்.
விவசாயம், ஆற்றல், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவையும் வலுப்படுத்தும் நோக்கில், போல்சனாரோவின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் போல்சனாரோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா!