குடியரசு தினவிழாவை முன்னிட்டு பிரேசில் அதிபர் ஜயிர் பொல்சோனாரோ நான்கு நாள் சுற்றுப்பயணமாக வரும் 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளார்.
அவரது வருகையையொட்டி, இந்தியா-பிரேசில் இடையே 15-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க செயல் திட்டம் தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான பிரேசில் தூதர் ஆன்ரே அரான்ஹா கோரியா தெரிவித்தார்.
"இந்திய அரசு மற்றும் பல நிறுவனங்களுடன் 15-க்கும் அதிகமான ஒப்பந்தங்களைப் பரிமாற்றிக்கொள்ளவுள்ளோம். இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வண்ணம் செயல் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை இருநாட்டு தலைவர்களும் (பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் ஜயிர் பொல்சோனாரோ) இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர்" என அவர் கூறினார்.
ஆற்றல், விவசாயம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுவூட்டும் நோக்கில் பிரேசில் அதிபரின் இந்தப் பயணம் அமையவுள்ளதாக தெரிவித்த அவர், குடியுரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதில் பிரேசில் அதிபர் பெரும் மகிழ்ச்சிகொள்வதாகவும், இந்தியாவின் மதிப்புமிக்க அழைப்பு இது என்றும் கூறினார்.
இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரை பிரேசில் அதிபர் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி தேர்தல்: கடைசி நாளில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்