அமெரிக்க அதிபர் ஒருவருக்கு இந்திய மக்கள் இந்தளவுக்கு வரவேற்பு அளித்தது இது முதன்முறை அல்ல. முன்னதாக 1959ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஐஸ்நோவர் இந்தியாவுக்கு வந்த போதும், இதேபோன்று நிகழ்ச்சி நடைபெற்றது. புது டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஐஸ்நோவர் பேசினார். இதன் நீள்ச்சியாகவே மதிரா ஸ்டேடியத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. ஹூஸ்டனில் நடந்த 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி, அகமதபாத்தில் 2017ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிகளை 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நினைவு கூர்ந்தது.
சீனாவை மையமாகக்கொண்டே இந்திய அமெரிக்க உறவு மலர்வதாக சிலர் வாதிடுகின்றனர். இந்தக் கூற்று ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். மதிரா ஸ்டேடியத்தில் ட்ரம்ப் பேசியபோது, 'மக்களை வற்புறுத்தல், மிரட்டல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் மூலம் அதிகாரம் கொண்ட அரசு ஆளும் தேசத்துக்கும் தனது மக்களுக்கு சுதந்திரம் அளிப்பதன் வழியாக அவர்களின் லட்சியங்களை எட்ட ஊக்கப்படுத்துவதன் மூலம் வளரும் ஒரு தேசத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன' என்று குறிப்பிட்டார்.
இந்தக் கூற்றை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள், இந்தியாவுக்கும் சீனாவுக்குமுள்ள வித்தியாசத்தை ட்ரம்ப் மறைமுகமாகக் கோடிட்டு காட்டியுள்ளதாகக் கூறுகின்றனர். எனினும், இந்தியா அமெரிக்காவுக்கிடையே உள்ள உறவு வளர்ச்சி பெறுவது சீனாவை மையமாகக்கொண்டு என்பது மட்டுமே என்று சொல்லிவிட முடியாது.
இந்தியா-அமெரிக்க உறவானது பன்முகத்தன்மை கொண்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சீனாவின் அசுர வளர்ச்சிக்கு முன்பே, இந்த இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு பேணப்பட்டு வந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்கிறார்கள். அமெரிக்கர்களுடன் நெருங்கிய உறவும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
இந்தியர்கள் பரவலாக ஆங்கிலம் பேசுபவர்களாக இருப்பதால், அவர்களால் எளிதாக அமெரிக்கர்களுடன் உறவாடமுடிகிறது. இரு நாடுகளுமே ஜனநாயக நாடுகள். இரு நாட்டிலும் நிலவும் அரசியல்தன்மை, தலைவர்களிடையே உள்ள புரிந்துணர்வு நட்பு வலுப்பெற உதவியாக அமைந்துள்ளது.
தலைவர்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வு காரணமாகவே, 'காஷ்மீர், சிஏஏ போன்ற விஷயங்களை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்' என்று ட்ரம்ப் சொன்னார். குறிப்பாக சிஏஏ குறித்து கேட்டபோது, '' அதை குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தை நான் இந்தியாவிடம் விட்டுவிடுகிறேன். இந்திய மக்களுக்காக இந்தியா அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன் '' என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
இந்தியாவுக்கு அமெரிக்காதான் முக்கியமான வர்த்தக பார்ட்னர். சேவை, சரக்குகள் பரிவர்த்தனை இரண்டையும் எடுத்துக்கொண்டால் கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் 142 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இரு நாடுகளும் வர்த்தகம் புரிந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் சீனாவுடன் சராசரியாக 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகப் பற்றாக்குறை கொண்டுள்ள இந்தியா, 2018ஆம் ஆண்டு 20.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு உபரியாக வர்த்தகம் செய்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம் ஆகும்.
தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை (எஃப்.டி.ஏ) இறுதி செய்ய இரு நாடுகளும் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன, தலைவர்கள் இருவரும் சமீபத்திய சந்திப்பின்போது. வெளியிட்ட கருத்துகள் விரைவில் இந்தப் பிரச்னையை தீர்க்கும் என்பதையே காட்டுகிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் வேறு வேறு பொருளதாரத் தன்மையை கொண்ட நாடுகள் என்பதால் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட தாமதமாவதற்கு பல துறைகளில் காரணிகள் உள்ளன. ட்ரம்ப் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர். ஆனால், அவரின் அரசியல் அடித்தளம் அமெரிக்காவின் கிராமப்புறங்களை சார்ந்துள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு, மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள தொழில்துறையினரை நம்பி டிரம்பின் அரசியல் வாழ்க்கை இல்லை. இதன் விளைவாக, ஜனாதிபதி ட்ரம்ப் மற்ற நாடுகளிலிருந்து விவசாயத் துறையில் பெரிய சலுகைகளைப் பெற ஆர்வமாக உள்ளார். இந்தியா போன்ற நாடுகளுக்கு, விவசாய, பால் உற்பத்தி துறைகளில் சலுகைகளை வழங்குவது கடினம்.
மேலும், ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் முறையும் பிரச்னையின் மூலமாகும். சர்வேதேச அரசியலில் அமெரிக்காவின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் வகையில், 'மீண்டும் அமெரிக்காவை தன்னிகரற்ற நாடாக்குவோம்' என்ற கோஷத்தை ட்ரம்ப் எழுப்பிவருகிறார்.
ட்ரம்பின் உள்நாட்டு நிர்பந்தம் காரணமாக, அமெரிக்காவுக்கான வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்கா சார்பாக நல்ல ஒப்பந்தங்களைப் பெற்றதாக அந்த நாட்டு மக்களுக்கு தெரியபடுத்த வேண்டிய அவசியமும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு புதிய சிக்கலை சேர்க்கிறது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதே ட்ரம்பின் முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு வர்த்தகத்தில் 20.8 பில்லியன் டாலர்களும் சேவைத்துறையில் 4.4 பில்லியன் டாலர்களும் வர்த்தகப் பற்றாக்குறையாக உள்ளது. அதேவேளையில், அமெரிக்காவுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவுடன் 378 பில்லியன் டாலர்கள் வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது.
எனினும் இந்தியா, சீனாவை ஒரே கண்ணோட்டத்தில் அதாவது பாதுகாப்புமிக்க பொருளாதார நாடுகளாகவே ட்ரம்ப் பார்க்கிறார். ஆனால், பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் கொள்முதல், இந்திய விமான நிறுவங்களுக்கு போயிங் நிறுவனத்தில் விமானங்கள் ஆர்டர் செய்வது, அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் செலவினங்களை எடுத்துக் கொண்டால் இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறையை நிச்சயம் ஈடுகட்டும்.
புதுடெல்லிக்கும் வாஷிங்டனுக்குமான உறவில் நம்பிக்கை வலுபெற்றுள்ளது. அதனால்தான், அமெரிக்கா இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. Integrated Air Defense Weapon System (IADWS) என்ற நவீன தொழில் நுட்பத்தையும் ஆயுதம் ஏந்தி கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நவீன ட்ரோன்களையும் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, இந்தியாவிடம் பி8-ஐ நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் போர் விமானம், சி-17 குளோப்மாஸ்ர், அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர், சி-130 ஜே சூப்பர் ஹெர்குலீஸ் போக்குவரத்து ஹெலிகாப்டர், சினுக் ரக ஹெலிகாப்டர்,AN-TPQ ஆயுதங்களை கண்டுபிடிக்கும் ரேடார், எம் - 777 அதிநவீன பீரங்கிகள் உள்ளன. ட்ரம்பின் இந்திய வருகையின்போது, எம்.ஹெச் 60 ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள், ஏ.ஹெச். 64 ஈ அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்க அமெரிக்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்தியா தன் பாதுகாப்புத்துறைக்கு அமெரிக்கவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்வது அதிகரித்ள்ளது. ஆனால், இப்போதும் ரஷ்யாவிடமிருந்துதான் இந்தியா 60 சதவிகித ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கினாலும் அவற்றில் சிலவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டமும் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.
இன்னெரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இரு நாடுகளும் வர்த்தக, தகவல் தொடர்புக்கு உதவும் வகையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்த திறந்த மனதுடன் நம்பிக்கையுடன் செயல்படுவதும் பாதுகாப்பான இணையதள வசதிகளை பெற இரு நாடுகளும் ஒருங்கிணைத்து கைகோர்த்து செயல்படுவதும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சீனாவின் ஹூவாய் 5ஜி நெட்வோர்க் செயல்பட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளை செயல்படுத்துவதற்கு சீன நிறுவனங்கள் உண்மையிலேயே பட்டியலிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்த போது, ஜியோ நெட்வொர்க்கை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி, 'ஜியோ நெட்வொர்க்கில் ஒரு சிறிய சீன தயாரிப்பு பொருள் கூட இடம் பெறவில்லை' என்று சொன்னார். அமெரிக்க அதிபர் இந்த விஷயத்துக்காக முகேஷ் அம்பானியை வெகுவாக பாராட்டினார்.
சமீப காலங்களில், ஆசியாவில் பல நாடுகளில் சீன முதலீட்டுடன் தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதன் காரணமாக கடன் வலையில் சிக்கியுள்ளன, இதனால் அந்த நாடுகள் பலவித அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன. இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில்தான், இந்தியாவில் ட்ரம்ப், மோடி கூட்டாக , 'இரு நாடுளும் இணைந்து, ப்ளுடாட் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் சர்வதேச அளவிலான உள் கட்டமைப்பு மேம்பாடுகளை செய்யும்போது, பரஸ்பரம் நம்பிக்கை அதிகரிக்கும்' என்று கூறினர். ப்ளூ டாட் நெட்வொர்க் என்பது தரம், வெளிப்படைத்தன்மை, நிதி அளிப்பதில் நம்பகத்தன்மை, பாதுகாப்பு போன்ற பல்வேறு விதங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சான்றிதழ் அளிக்கும் ஒரு அம்சமாகும். ஆசிய நாடுகள், பல உலக நாடுகளில் சாத்தியமற்ற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க இந்தியா, அமெரிக்கா மற்றும் அதேபோன்ற கருத்து கொண்ட பிற நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.
ட்ரம்ப் வருகையின் போது, பல விதமான நல்ல கருத்துகள் ஏற்பட்டாலும், தலிபான்கள் குறித்து கொள்கையில் அமெரிக்கா கொண்டுள்ள மாற்றம் இந்தியாவுக்கு கவலை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் தங்கியுள்ளது. இனிமேலும், அங்கே இருப்பதில் அர்த்தமில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, 'ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் வெளியேறும்' என்று ட்ரம்ப் உறுதிபடக் கூறினார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாப்புடன் வெளியேறுவது தொடர்பாக தலிபான்களுடன் அமெரிக்கா தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் விலகுவது குறித்த முடிவு அமெரிக்காவின் சொந்த விருப்பம் மற்றும் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், சரியான கொள்கைகள் கொண்ட ஒரு முறையான அரசியல் அமைப்பாகத் தலிபானை நியாயப்படுத்த முயற்சிப்பது கவலைக்குரியது.
சில நாள்களுக்கு முன், அமெரிக்காவும் தலிபான்களும் குறுகிய கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்த ஒப்பந்தம் வெற்றிக்கரமாக அமைந்தால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவீச்சில் வெளியேறும் நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்தம் தீட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்போக்குத்தனமான சிந்தனைகள் கொண்ட தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்தி வாய்ந்த அரசியல் அமைப்பாக உருவாவது, இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல. மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பிற அமைப்புகளுடன் உறவை வளர்ப்பதில் இந்தியா விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா- அமெரிக்கா ஆகிய நாடுகள் அணுஆயுத ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. அந்த தருணத்தில், இந்தியா அணுஆயுத சுதந்திரத்தை இழக்கும் என்றும் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பல தரப்புகளில் இருந்து கருத்துகள் வெளியிடப்பட்டன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அணுஆயுத விவகாரத்தில் பெரிய நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது இது போன்ற எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது இயற்கையானது.எதுவாக இருப்பினும் , நமது எச்சரிக்கை உணர்வு நமது தேசிய நலன்களை மேம்படுத்துவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கும் போது குழப்பத்தை உருவாக்கும் விதத்தில் அமைய கூடாது. அமெரிக்கா போன்ற பெரிய சக்திகளை கையாள்வதில் இந்திய தலைவர்கள் இதுவரை எச்சரிக்கையுடனும் திறமையுடனும்தான் செயல்பட்டு வந்துள்ளனர். சமீபத்திய , அமெரிக்க அதிபரின் இந்திய வருகையும் இந்திய வெளியுறவுத் துறையின், கொள்கையின் விவேகமான அணுகுமுறைக்கு அத்தாட்சி ஆகும்.
இதையும் படிங்க... பிரதமர் மோடி சமூக வலைதளங்களைக் கையாள குவியும் பெண்கள்!