கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பல தொழிலதிபர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அப்போது பேசிய இன்போசிஸ் தலைவரும் இணை நிறுவனருமான நந்தன் நிலேகனி, "தொழில்நுட்பத்தின் முன்னோடியாக பிரான்ஸ் திகழ்கிறது. தற்போதைய காலத்தில் தரவுகள் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பல வகையில் எளிதாகத் தரவுகளை சேகரிக்கின்றனர். இதைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் கொண்ட பிரான்ஸூடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். பல விதமான கணக்குகளை ஆராய்வதில் தொழில்நுட்ப உதவி அவசியம் தேவைப்படுவதால் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்” என்ற கருத்தை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனெய்ன், “கர்நாடகாவில் 150 பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன. பெங்களூருவின் பிரெஞ்சு டெக் சிட்டி இந்திய தொழில் முனைவோர் ஒன்றுகூடுவதற்கான இடமாக உள்ளது” எனப் பெருமிதம் கொண்டார்.
ஃபிண்டெக் தொழில் கடந்த சில ஆண்டுகளாக பிரான்சில் வளர்ந்து வருகிறது. ஃபிண்டெக் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் திரட்டுகின்ற நிதிகளின் அளவு அதிகரித்து வருகிறது. 2010ஆம் ஆண்டில், பிரான்சில் ஃபிண்டெக் தொடக்க நிறுவனங்களால் மொத்தம் ஐந்து மில்லியன் யூரோக்கள் திரட்டப்பட்டன. அதேசமயம், 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த எண்ணிக்கை 354 மில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.