அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): மனித வாழ்வில் கரோனா ஒரு அங்கமாகத் திகழும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கோவிட்-19 தொற்று சாதாரண காய்ச்சலைப் போன்று அனைவரின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழும். அது சாதாரண காய்ச்சலின் தன்மைக் கொண்டது தான். அதன் மூலம் பேராபத்துகள் எதுவும் இல்லை.
கோவிட்-19 தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை ஒதுக்கி வைக்கவோ, அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தவோ கூடாது. 80 விழுக்காடு நோய்வாய்ப்பட்டவர்கள், இந்த நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தான் கண்டறியப்பட்டுள்ளனர்.
பல பேருக்கு நோய்க் கிருமித் தொற்று வந்து, தானாகவே செயலிழந்து போவதை நாம் தினம்தோறும் செய்திகள் வாயிலாக அறிகிறோம். அதுபோல பெருவாரியாக கிருமித் தாக்குதலுக்கு உள்ளான மனிதர்கள், மருத்துவமனைக்குச் செல்லாமலேயே குணமடைந்துள்ளனர்.
மேலும், 14 விழுக்காடு நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுள்ளனர். அவர்களில் 4 விழுக்காடு அளவிற்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை வைத்து பார்க்கும்போது, நம் உடல்நிலையைப் பொறுத்தே நோயின் தாக்கம் இருக்கும். இதனால் அனைத்து மக்களும், சத்தான உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்ணவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், யாருக்கேனும் கோவிட்-19 தொற்று அறிகுறி இருந்தால், உடனடியாக 104 அல்லது 14410 என்ற எண்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.