இந்தியாவில் ஓடும் ஆறுகளில் 50 விழுக்காடு தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக காணப்படுகிறது. ஆறுகள் மட்டுமல்ல, எண்ணற்ற குளங்களும், நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளால், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 185 நீர்நிலைகள் மாசடைந்து காணப்படுகின்றன.
சமீபத்திய ஊரடங்கின் போது, நீர், காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டிருந்தாலும், கடந்த சில நாள்களாக பெய்த மழையால், தண்ணீரோடு ரசாயனக் கழிவுகள் வெளியேறி ஹைதராபாத் சுற்றிப்புற பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. ஹுசைன்சாகர் உள்பட அனைத்து நீர் ஆதாரங்களிலும் டன் கணக்கில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதற்காக அரசாங்கம் சுத்திகரிப்பு என்ற பெயரில் 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
நீர்நிலைகளில் சட்டவிரோதமாக அத்துமீறல்கள், வீடுகள் கட்டுவது குறித்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக, தெலங்கானா உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. மேலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் போன்று ஹைதராபாத்தை மாற்ற அரசாங்கம் விரும்புவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனிடையே, 'முன்னேறு வாகு'வில் நூற்றுக்கணக்கான வாத்துகள் இறந்தது குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த காலங்களிலும், கண்டிகுடம், கடிபொத்தரம், பெத்தசெருவு ஆகியவற்றில் இறந்த மீன்களை பெரிய அளவில் குவித்து வைத்ததை அடுத்து, குளோரோமீதேன் போன்ற ரசாயனக் கழிவுகளின் பங்கு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் வந்தன. 1960ஆம் ஆண்டுகளில் பெங்களூரு நகரம் 260க்கும் மேற்பட்ட ஏரிகளால் செழித்திருந்தது. ஆனால், தற்போது அங்கு 10 ஏரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன் 137 நீர் குளங்களைக் கொண்ட அகமதாபாத் நகரம், 2012ஆம் ஆண்டுக்குள் அத்துமீறல்கள், கட்டுமானங்களால் அதில் பாதியை இழந்துள்ளது. பிகார் மாநிலம் பாட்னாவில் சுமார் 800 குளங்கள், ஏரிகள் அழிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஜலசிரி’ என்ற புனைப்பெயர் கொண்ட கேரளாவில், 73 விழுக்காடு நீர்வளம் மாசுபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நீர்நிலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சுருங்கி வருவதால், மீதமுள்ளவை கூட தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத நச்சு ரசாயனங்கள், கழிவுகளால் அம்மாநில மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை சரி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தற்போது கிடைக்கக்கூடிய குறைந்த அளவு நீர்வளங்களை நாடு இழக்கும் என்று இந்திய அறிவியல் கழகத்தின் அறிவியல் பேராசிரியர் டாக்டர் ராமச்சந்திரா பிரபுபாதா போன்றவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். நாட்டில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே கடுமையான நீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக நிதி அயோக் 'அறிவித்துள்ளது. நான்கில் மூன்று பங்கு நீர்வளம் மாசுபடுவதால் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
அறிவியலால் செய்யக்கூடிய பல அற்புதங்கள் உள்ளன. ஆனால் மனிதனால் தண்ணீரை உருவாக்க முடியாது. இயற்கையால் வழங்கப்படும் ஒவ்வொரு சொட்டு நீரையும் சரியாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும் நேரத்தில், குறைந்த அளவே உள்ள நீர்வளங்களை வீணடிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது. இதுபோன்ற மிக முக்கியமான மூலத்தை மாசுபடுத்துவது கடுமையான குற்றமாகும், அதிகபட்ச தண்டனைக்கு உரித்தானது.
மத்திய, மாநில அரசுகள் விதிகளைச் சீர்திருத்துவதிலும், நீர் நிர்வாகத்தின் நல்ல தரத்தை அமல்படுத்துவதிலும் வெற்றிபெறும் போதுதான், மக்கள் வாழ்வதற்கான உரிமை பாதுகாப்பாக இருக்கும்.