மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கன்ஷ்யம் மாலவியா கலந்துகொண்டு சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது, ‘ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசம் தெரியாமல் அனைவரும் மது அருந்துகின்றனர். இதில் ஏழைகள் பொதுவெளியில் குடித்துவிட்டு சாலையில் கிடக்கிறார்கள். பணக்காரர்கள் வீட்டில் குடித்துவிட்டு போதையில் கிடக்கிறார்கள். மொத்தத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மது அருந்துகின்றனர்.
இவர்களைப் பார்த்து தற்போது சிறுவர்களும் கள்ளத்தனமாக மது அருந்துகின்றனர். அப்படி குடிக்கும் சிறுவர்கள் இனிமேல் மது அருந்தக்கூடாது. நீங்கள் அனைவரும் மது குடிக்க ஆசைபட்டால் 18 வயது நிரம்பிய உடனே மது அருந்துங்கள்’ என்று அறிவுரை கூறினார்.
இந்த வீடியோ அம்மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும்தான் மது விநியோகம் செய்யவேண்டும் என மத்தியப் பிரதேசத்தில் சட்டம் இருக்கும் நிலையில், 18 வயது நிரம்பியவுடன் மது அருந்தலாம் என்று சிறுவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளரே அறிவுரை வழங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.