கோவிட் 19 வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முக்கிய நடவடிக்கையாக தனிமைப்படுத்துதலை அரசு பரிந்துரைக்கிறது. கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறது. இதனை, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்று சொல்வதைவிட, சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளுதல் என்றே சொல்லலாம்.
இந்த சமூக விலகலை (social distancing), வேலைக்குச் செல்பவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்துகிறது. மத்திய அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தே வேலைசெய்யலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதைப் போலவே, பிற தனியார் நிறுவனங்களும் வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைக்கிறது.
இது குறித்து, பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறும்போது, "நகரங்களில் பெரும்பான்மையாகச் செயல்படும் வரையறுக்கப்பட்ட கூட்டுப்பொறுப்பு லிமிடெட் பார்ட்னர்ஷிப் (Limited Liability Partnerships) நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை சமூக விலகலை அறிவுறுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இதற்காக, மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை வீட்டிலிருந்து வேலைசெய்ய வேண்டுமென மத்திய அரசு உறுதியாகச்சொல்கிறது.
இதனால், அனைத்து நிறுவனங்களும், எல்.எல்.பி.களும் (Limited Liability Partnerships) வீட்டிலிருந்து வேலைசெய்யும் திட்டத்திற்கான வலை வடிவத்தை உருவாக்கி, அவற்றை தயார்படுத்திக் கொள்கின்றன. காணொலி மூலமாகக் கலந்தாய்வு அல்லது மின்னணு, தொலைபேசி மறு ஆய்வுகளை நடத்தி கரோனாவைத் தடுக்க முயன்றுவருகின்றன" என்றார்.
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், இந்த நடவடிக்கைகளை நிறுவன சட்டம், வரையறுக்கப்பட்ட கூட்டுப் பொறுப்புச் சட்டம் (எல்.எல்.பி.) ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுத்துகிறது.
இதையும் படிங்க: 'நீதி கிடைத்துவிட்டது' - நிர்பயா தாயார் நெகிழ்ச்சி