நாக்பூர் (மகாராஷ்டிரா): பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா, “காங்கிரஸின் தலைமைத்துவ குழப்பங்கள்” குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார் வாழ்ந்து மறைந்த வீட்டுக்கு சென்று, அவரின் நினைவிடத்தில் ஜோதிராதித்யா சிந்தியா அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் காங்கிரஸ் தலைமைத்துவ குழப்பங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு, “நான் பாஜகவின் தொண்டன், பா.ஜனதாவுக்காக வேலை பார்ப்பவன். காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவ குழப்பங்கள் குறித்து பதிலளிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ். குறித்து கூறுகையில், “ஹெட்கேவாரின் இல்லம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக இருக்கும். அவர் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்கினார். இந்த இடம் தேசத்திற்கான ஆற்றலை வெளிப்படுத்துகிறது” என்றார்.
இந்தாண்டு மார்ச் மாதம் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தார்.
மேலும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவும் வழிவகுத்தார். டெல்லியில், நேற்று (ஆக.24) நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மூத்தத் தலைவர்கள் எழுதிய கடிதத்தால் கூச்சல்- குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சச்சின் பைலட்டை தக்கவைக்க இறுதிக்கட்ட முயற்சியில் களமிறங்கிய ராகுல்