பிரபல கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ், பயோ மிமிக்ரி பாடத்திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. பயோ மிமிக்ரி என்பது உயிரியல், பொறியியல் ஆகிய துறைகளின் கலவையாகும். பயோ மிமிக்ரி குறித்த முழுமையான படிப்பை வழங்கும் இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் ஐஐடி மெட்ராஸும் ஒன்றாகும். பேராசிரியர் எம்.எஸ்.சிவக்குமார், சிவன் சுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன்-தேஷ்பாண்டே, பேராசிரியர் சத்யநாராயண சேஷாத்ரி, பேராசிரியர் சீனிவாச சக்ரவர்த்தி ஆகியோர் இந்த பயோ மிமிக்ரி பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளனர்.
மேலும், ஆராய்ச்சி, தொழில் முனைவோர், புதிய தயாரிப்புகள், செயல்முறைகள், அமைப்புகள் ஆகியவற்றில் வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் பயோ மிமிக்ரி ஆர்வலர்கள் இருக்கும் சமூகத்தையும் ஐ.ஐ.டி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது. இளம் தலைமுறையினரிடமிருந்து தைரியமான, நிலையான யோசனைகளைத் பெறுவதற்காக ஒரு பயோமிமிக்ரி சவாலை நடத்த ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "நீங்கள் பயோமிமிக்ரி பாடத்திட்டத்தை கற்க ஒரு உயிரியலாளராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு தேவையானது ஆர்வம்தான். தாமரை இலையைப் பார்க்குப் போது எப்படி தாமரை இலை சுத்தமாக உள்ளது என்ற கேள்வி மனதில் வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஐஐடி மெட்ராஸில் Bsc in Data Science and programming ஆன்லைன் கோர்ஸ் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.