மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான திக் விஜய் சிங், அசோகா கார்டன் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடி நாட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகளை வேட்டையாடிதாக தெரிவிக்கிறார். புல்வாமா, பதன்கோட், உரி போன்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது அவர் எங்கிருந்தார் என்றும், இதுபோன்ற தாக்குதல்களை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.
நம் நாட்டில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் சகோதரரர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் இந்துக்கள் பிரச்னை ஏற்படும் போது ஒன்றாக இருக்க வேண்டும் என்று தவறான எண்ணத்தை பரப்பி வருகின்றனர். நம் நாட்டை 500 ஆண்டுகள் ஆட்சி செய்த இஸ்லாமியர்களால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே மதத்தை விற்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பின்னர், தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது சாபமிட்டிருந்தால், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரக்யா சிங் தாக்கூர், தான் சாபமிட்டதால் தான் மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே இறந்தார் என்றும், பின்னர் எதிர்ப்பை தொடர்ந்து தனது பேச்சிற்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார்.