பிகார் அரசியலில் நீண்ட காலமாக எதிரெதிர் நிலைகளில் இருந்த எல்.ஜே.பி மற்றும் ஜே.டி.யு ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளன. ஒரே கூட்டணியில் அங்கம் வகித்து வந்தாலும் இரண்டு கட்சியின் மூத்த தலைவர்களும் ஒருவரை மற்றொருவர் தாக்கி அறிக்கை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (அக்டோபர் 21) ஊடகங்களிடையே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
எல்.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிராக் பாஸ்வான் பத்திரிகையாளர்களிடையே பேசியபோது, "நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வெற்றிப் பெற்றால், நமது மாநிலம் மிக மோசமான தோல்வியை அடையும். தவறுதலாக வெற்றி பெற்றால் கூட அது நமது மாநிலத்தை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும்.
சாதியை வைத்து அரசியல் நடத்தும், சாதி வெறியைத் தூண்டி ஆட்சி நடந்தும் அவரது தலைமையின் கீழ் பிகார் எந்த வளர்ச்சியையும் பெறவில்லை. 'பிகார் - பிகாரி' பார்வையின் அடிப்படையில் எங்களது கட்சியின் அறிக்கை அமைந்துள்ளது. பிகார் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும்.
முதலாளிகளையும், வேலை வாய்ப்பு தேடுபவர்களையும் இணைக்கக்கூடிய ஒரு சமூக வலைதளத்தை உருவாக்குவது, வேலையற்ற படித்த பட்டதாரிகளுக்காக யுவா கமிஷனை அமைப்பது, தொகுதிகள் தோறும் பெண்களுக்கு தனி கழிப்பறைகள் கட்டித்தருவது, கிராம பஞ்சாயத்து தலைமையக கட்டடங்கள் அமைப்பது, விவசாயிகளின் உற்பத்திகளை விற்பனை செய்ய சந்தைகள் அமைப்பது என்பன போன்ற வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் நடைமுறைக்கு கொண்டுவருவோம்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் 100 விழுக்காடு பணியாளர்கள் விரைவில் நிரப்புவோம். ஒப்பந்தத்தில் மாநில அரசாங்கத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் முறைப்படுத்தப்படுவார்கள். வெள்ளம் மற்றும் வறட்சியைத் தடுக்க, மாநிலத்தின் அனைத்து ஆறுகளும் கால்வாய்களால் இணைக்கப்படும்" என தெரிவித்தார்.
பிகாரை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் ஜே.டி.யு.வுக்கு எதிராக எல்.ஜே.பி. தனது சார்பில் போட்டி வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.