ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல், குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டது தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பஃரூக் அப்துல்லா,
"அமர்நாத் யாத்திரை இருப்பதால் குடியரசுத்தலைவர் ஆட்சியை நீட்டிப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பின், காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் அதிலும் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக அரசு தேர்தலைத் தடுத்து நிறுத்தியுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது பால்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியபோது உயிரிழப்புகளை ஏற்படவில்லை என்று கூறியதை சுட்டிக்காட்டிய அவர், காஷ்மீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும், போரின் மூலம் அல்ல என்றார்.
மேலும் "சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்றால் இந்தியாவுடனான எங்கள் உறவும் தற்காலிகமானது தான். ஏனென்றால் மகாராஜா ஹரி சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, காஷ்மீர் மக்கள் தாங்கள் யாருடன் இணைய வேண்டும் என்று முடிவெடுக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டும் என்று உறுதியளித்தனர். இதுவரை பொதுவாக்கெடுப்பு நடத்தாதபோது சட்டப்பிரிவு 370-ஐ மட்டும் எவ்வாறு நீக்கமுடியும்" என்று கேள்வி எழுப்பினார்.