நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கரோனா வைரஸ் பாதிப்பிற்கான எவ்வித அறிகுறிகளும் இன்றி பாதிக்கப்படுவரின் விழுக்காடு அதிக அளவில் உள்ளது.
அரசு மருத்துவமனைகள் அனைத்தும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனையினை மேற்கொள்ளவே அதிக அளவு பணம் செலவாகிறது என மக்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆன்டிஜென் அடிப்படையிலான கரோனா பரிசோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவி, ஆய்வகப் பரிசோதனை இன்றி குறைந்த விலையில் கரோனா பரிசோதனை செய்ய உதவும் என்றும், கர்ப்பமடைவதைக் கண்டறியும் சோதனைக் கருவி போலவே இது இருக்கும் என்றும், பிசிஆர் சோதனைக் கருவிகளில் தெரிவதைவிட எளிதில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இந்தக் கருவி கண்டறியும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயம் மற்றும் கதிரியக்கவியல் மருத்துவர் அமரேந்தர் சிங் கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்தக் கருவியை பரிசோதனை செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் புதிதாக சோதனைக் கருவிகளை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. இந்தக் கருவி இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி, மனித உடலில் கரோனா வைரஸைத் தூண்டும் நோய் மூலக்கூறுகள் உள்ளனவா என்பதை 30 நிமிடங்களில் கண்டறியும் எனக் கூறப்படுகிறது. ’ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் -19 ஏ ஜி’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவியை உருவாக்க, ஐநூறு ரூபாய்க்கும் குறைவான செலவே ஆகும் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : திருட்டுப்போன மலையேற்ற வீராங்கனையின் விருதுகள்!