சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதியன்று இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் இந்திய தரப்பில் உயர் அலுவலர் உள்ளிட்ட 20 ராணுவத்தினர் உயிரிழந்தனர். சீனத் தரப்பில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிய முடிகிறது. இதையடுத்து, லடாக்கில் உள்ள இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
சீன அரசு கூடுதல் படைகளை குவித்துவருகிற நிலையில் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தரைப்படை, விமானப்படை, இந்திய-திபெத்திய பாதுகாப்பு படை ஆகியவற்றின் படைபலத்தை அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த சீன வீரர்கள் அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். தாங்கள் அமைத்து இருந்த கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்களையும் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்றனர். இந்நிலையில், லடாக் எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியா - சீனா எல்லையில் இந்திய போர் விமானங்களான மிக் -29, சினூக் ஹெவிலிஃப்ட், சுகோய் 30 எம்.கே.ஐ. அப்பாச்சி தாக்குதல் ரக விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தணிக்க இரு தரப்பினரும் முயற்சிகள் எடுக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.