மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கன மழையால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோமால்வாடா கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இதையடுத்து, விமானப்படை மூலம் 25 பேர் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது விடிஷா எம்.பி. ராமகாந்த் பார்கவா, காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், பிரதமர் நரேந்திர மோடியுடன் மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து இன்று (ஆகஸ்ட் 30) பேசினார். இது குறித்து அவர் கூறும்போது, "வெள்ள பெருக்கு குறித்த முழு நிலைமையையும் பிரதமர் மோடிக்கு விளக்கினேன். ஒரே இரவில் மீட்புப் பணிகளை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நரேலா கிராமத்தில் சிக்கித் தவித்த செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் ஒன்பது மாவட்டங்களில் 394க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எட்டாயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.