இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மருத்துவ காரணங்களுக்காக இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டும் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் ரத்த மாதிரிகளுடன் சண்டிகருக்குச் சென்றுகொண்டிருந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக டெல்லி அவ்டர் ரிங் சாலையில் தரையிறங்கியுள்ளது.
ஹிண்டன் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய விமானப் படை உறுதிசெய்துள்ளது.
இது குறித்து இந்திய விமானப் படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "விமானிகள் மிகச் சரியான முடிவை எடுத்து சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கியுள்ளனர். இதில் பொதுச் சொத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. தற்போது விமானம் சரிசெய்யப்பட்டு உடனடியாக ஹிண்டன் விமான தளத்திற்கு அனுப்பப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய தலைநகரில் மருத்துவருக்கு கரோனா - அச்சத்தில் மக்கள்!