மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் படத்தை தவறான வகையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்தோடு மார்பிங் செய்து, கடந்த வாரம் பாஜகவின் இளைஞரணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இச்சம்வம் பூதாகரமாக வெடித்தநிலையில் அவர் கொல்கத்தா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பிரியங்கா சர்மா தன்னை விடுவிக்கக் கோரி அளித்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எழுத்துப் பூர்வமான மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
இந்த பிணை நேற்று வழங்கப்பட்ட போதும் அவர் காவலில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் இன்று காலை விடுதலை செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா சர்மா, வழக்கில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய பின்பும் என்னை 18 மணி நேரத்திற்கு விடுதலை செய்யாமல் வைத்திருந்தனர். அவர்கள் எனது குடும்பத்தார், வழக்கறிஞர் உள்ளிட்டோரையும் சந்திக்க முடியாதபடி செய்தனர். நான் இந்த வழக்கில் தொடர்ந்து போராடுவேன் என்றும், இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.