புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் கட்டப்பட்ட திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடமாட்டோம் என்றும் பிரதமர் கூறுகிறார்.
ஆனால், அவர் மாநில அரசைக் கேட்காமலேயே ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற எண்ணுகிறார். எந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றாலும் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் செய்ய முடியாது. இதை மத்திய அரசு புறக்கணித்து உதாசீனம் செய்துவருகிறது.
நாங்கள் ஏற்கனவே சட்டப்பேரவையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் இப்போது மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனக் கூறுவது மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. மத்திய அரசு வலியுறுத்தினாலும் புதுச்சேரியில் ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
இதையும் படிங்க: