ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் டிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. ஹைதராபாத் மக்களவை உறுப்பினரான அசாதுதின் ஓவைசியின் கட்சியும் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ரவீந்தரை ஆதரித்து ஹைதராபாத் ஜம்பாக் பகுதியில் ஓவைசி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பெண் ஒருவர், "இதுவரை வெள்ள நிவாரண நிதியைக்கூட நாங்கள் பெறவில்லை. நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது யாரும் வந்து எங்களுக்கு உதவவில்லை. தற்போது எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள்" என ஓவைசியின் முகத்துக்கு நேராக கேள்வி எழுப்பினர்.
அவரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாத ஓவைசி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். பெரும்பாலான இடங்களில் வாக்காளர்கள் இதே கேள்விகளை ஓவைசியை நோக்கி எழுப்பியுள்ளனர்.
கடந்த மாதம் ஹைதராபாத் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் உயிரிழப்புகளும், பொருள்சேதமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் ஒவைசியின் அசத்தல் நடனம்!