1916ஆம் ஆண்டுக்கு பின் தெலங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு 24 செ.மீ மழை பதிவாகியுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பலரும் வீடுகள், உடமைகள் ஆகியவற்றை இழந்துள்ளனர். இதுவரை 70 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருள்கள் சேதமடைந்துள்ளன.
வெள்ளப் பாதிப்பு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், மாநிலத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் நிலைமை மோசமாகி வருகிறது. இதனிடையே தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மாநிலத்தின் நீர் நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''மாநிலத்தின் தண்ணீர் தொட்டிகள், ஏரிகள், அணைகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க 15 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் நிலைகள் முழுவதும் தண்ணீர் இருப்பதாலும், தற்போது வெள்ள நீரும் சேர்ந்துள்ளதால் நிலைமை மோசமாவதைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 15 சிறப்புக் குழுக்களில் மாநிலத்தின் நீர் மேலாண்மைத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்'' என்றார்.
இந்த சிறப்புக் குழுக்கள் மாநிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகள், ஏரிகள் ஆகியவை உடைந்திடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் மம்தா வழங்கியது சரிதான்' - அபிஜித் பானர்ஜி!