சண்டிகரின் கோரியா மாவட்டத்தில் பார்வானி கன்யா ஆஷ்ரம் என்ற தனியார் பள்ளி இயங்கிவருகிறது.
இந்தப் பள்ளியில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் தன் மூன்று வயது குழந்தையுடன் அப்பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கிவந்துள்ளார்.
இதையறிந்த மாணவர் விடுதி வார்டன் சுஷ்மிலா சிங், அந்தப் பெண்ணை விடுதியிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, தன் கணவரை அழைத்துக் கொண்டு சுஷ்மிலா சிங் அந்த பெண்ணின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது, இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுஷ்மிலாவின் கணவர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக தரதரவென தரையில் இழுத்துச் சென்று அறைக்கு வெளியே தள்ளியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவந்த பள்ளி நிர்வாகம், வார்டன் சுஷ்மிலா சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண் துப்புரவுப் பணியாளரிடம் கொடூரமாக நடந்துகொண்ட வார்டனின் கணவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.