ஆந்திர மாநிலத்தில் ’மூன்று தலைநகரங்கள்’ விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அமராவதியை மேம்படுத்த நிலங்கள் தந்த விவசாயிகளும், மாநிலத்தின் கடன் சுமை அதிகரிக்கும் என்று தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.
போராட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியோ நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவை தாக்கல்செய்தார்.
போராடுபவர்களைக் காவல் துறையினர் தடியடி நடத்தியும் கைதுசெய்தும் வருகின்றனர். இந்தச் சூழலில், ஆந்திர சட்ட மேலவையில் தெலுங்குதேசம் கட்சி மூன்று தலைநகர மசோதாவை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்தது.
மொத்தம் 58 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமேலவையில் 27 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க, 13 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஒன்பது உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர். பெரும்பான்மையோடு தீர்மானம் சட்டமேலவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, சட்ட மேலவையில் ஒப்புதல் அளிக்கப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. இது தொடர்பாக தெலுங்க தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. மசோதா குறித்த எந்த விவாதமும் சட்டமேலவையில் நடைபெறாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மசோதா குறித்து அறிந்தால், மற்ற உறுப்பினர்களும் அம்மசோதாவுக்கு எதிராகவே இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தலைநகர் மசோதாவை ஆந்திர மேலவை தோற்கடிக்குமா?
ஆந்திர சட்டப்பேரவை இரண்டு சபைகளைக் கொண்டுள்ளது. ஆந்திர சட்டசபையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அதற்கு மேலவை ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். மேலவை நிராகரித்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. வேண்டுமானால் மசோதாவை அமல்படுத்துவதற்கான காலத்தை தள்ளிப்போடலாம். ஆனால், முற்றிலுமாக மசோதாவை மேலவையால் தடுத்து நிறுத்திவிட முடியாது.
அதன்படி, மேலவை மசோதாவை முதல் முறை நிராகரிக்கும் பட்சத்தில் அம்மசோதாவை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்து மேலவைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அப்போது மசோதாவை மேலவை நிராகரித்தாலும் ஒப்புதல் அளித்தாலும் மசோதா நிறைவேறியதாகவே கருதப்படும். குறிப்பாக, நிதி மசோதாக்களை நிறைவேற்றும் அதிகாரம் மேலவைக்கு இல்லவே இல்லை. மீண்டும் ஒருமுறை அழுத்திக் கூறலாம், மேலவையால் மசோதா நிறைவேற்றத்தின் காலத்தை மட்டுமே தள்ளிப்போட முடியும்.
மேலவைக்கு மசோதா மீது முடிவெடுக்க முதல் முறை மூன்று மாதங்களும் இரண்டாம் முறையில் ஒரு மாத காலமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டசபையில் அசுர பலத்துடன் நிற்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிச்சயம் மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் 58 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமேலவையில் ஆளும் அரசு 9 உறுப்பினர்களுடன் வலு குறைந்து காணப்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பில்லை.
இதையும் படிங்க: ஜெகன் மோகனை சந்தித்துப் பாராட்டிய நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி