கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா தீநுண்மியின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் தீநுண்மி பரவல் அதிகரிக்க டெல்லியில் மார்ச் மாதம் நடைபெற்ற சமய மாநாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. சமய மாநாட்டில் பங்கேற்று தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் பலர் தற்போது குணமடைந்துவருகின்றனர்.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் சமீபத்தில் கோரிக்கைவிடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தீநுண்மி தொற்றிலிருந்து குணமடைந்த பலரும் தங்கள் பிளாஸ்மாவை தானம் அளித்துவருகின்றனர். தற்போதுவரை டெல்லியில் மட்டும் நரிலா மையத்தில் 190 பேரும், சுல்தான்புரி மையத்திலிருந்து 51 பேரும், மங்கோல் பூரி மையத்திலிருந்து 42 பேரும் சிகிச்சைக்காக பிளாஸ்மாவை தானம் அளித்துள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்த நபர்களின் உடல்களில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும். அவர்களின் ரத்தத்திலுள்ள பிளஸ்மாவை எடுத்து தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவார்கள். இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களில் நோய் எதிர்ப்புச் சக்தி விரைவில் உருவாகும்.
இந்தப் பிளாஸ்மா முறையில் டெல்லியில் நடைபெற்ற சிகிச்சை வெற்றியடைந்திருந்தது. தங்கள் ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவை தானமாக அளிக்க ஏதுவாக யாரும் முன்வர மாட்டார்கள். இருப்பினும் தற்போது சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலரும் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத ஒன்றுகூடலைக் தடுக்க முயன்ற காவலர்கள் மீது தாக்குதல்!