கடந்த மாதம் 4ஆம் தேதி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெரும் வெடிவிபத்தாக மாறியது.
அந்த வெடிப்பில், ஏறத்தாழ 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 6,500 பேர் படுகாயமடைந்தனர். லெபனான் தலைநகரில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் மண் மேடாகிப் போனது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
அந்த பெரும் வெடி விபத்தின் அதிர்ச்சியிலிருந்து, லெபனான் மக்கள் மீள முடியாமல் தவித்துவரும் சூழலில், இன்று (செப்.10) மற்றொரு தீ விபத்து அங்கே மீண்டும் நிகழ்ந்துள்ளது.
பெய்ரூட் துறைமுகம் அருகே உள்ள டயர்கள் & எண்ணெய் வைக்கப்படும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, லெபனான் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணமும், அதில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை.