அடுத்த வாரம் (பிப்ரவரி 24ஆம் தேதி) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகையின் போது அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மோதிரா மைதானத்திற்கு செல்லும் வழியில் ஏராளமான மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமஸ்தே ட்ரம்ப்
பிப்ரவரி 24ஆம் தேதி மோதிரா மைதானத்தில் நடைபெறும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபரும் உரையாற்றவுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்பகலில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்குவார்.
அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டாக 'நமஸ்தே (வணக்கம்) ட்ரம்ப்' நிகழ்வில் உரையாற்ற மோதிரா மைதானத்திற்கு செல்வார். இது இந்திய- அமெரிக்க சமூகம் ஹூஸ்டனில் நடத்திய 'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு ஒத்ததாக இருக்கும்.
பேரணி
அந்த வகையில் கடந்த எட்டு மாதங்களில் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்தியாவுக்கான முதல் பயணமாகும்.
இது ஒரு முழுமையான பயணமாக இருக்கும். குஜராத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வை டொனால்ட் ட்ரம்ப் நாக்ரிக் அபிநந்தன் சமிதி ஏற்பாடு செய்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் போது, இந்தியாவின் வளமான கலாசாரத்தை பிரதிபலிக்கும்.
வழிநெடுகிலும் வரவேற்பு
ட்ரம்ப் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வரவேற்பார்கள். கைவினைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இதுவும் பேரணியின் ஒரு பகுதியாக இருக்கும்.
இந்த பாதையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் அலங்காரமும் இடம்பெறும்.
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே வலுவான ஒத்துழைப்பு உள்ளது. இந்த ஒத்துழைப்பு வலுப்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
காந்திக்கு மரியாதை
டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும் மோதிரா மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் டொனால்ட் ட்ரம்ப் டெல்லி செல்கிறார். முன்னதாக அவர் ஆக்ரா தாஜ்மஹாலை தனது மனைவி மெலினாவுடன் பார்வையிடுகிறார்.
டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு செல்லும் ட்ரம்ப், அங்கு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தையின்போது வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அமெரிக்காவின் ஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட, ஹவுடி மோடி நிகழ்ச்சி கடந்தாண்டு செப்டம்பரில் நடந்தது.
அ(மெரிக்கா)ங்கே நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை போல் இ(ந்தியா)ங்கே நமஸ்தே ட்ரம்ப் கவனம் பெறுகிறது.
இதையும் படிங்க: தெலங்கானா மாநிலத்தில் ட்ரம்புக்கு கோயில்