அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் அந்நாட்டு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் அரசுமுறைப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதன்படி பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன. ஒப்பந்தத்தின்படி, 24 MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்தியா வருகையை மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இது குறித்து மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருவதால் மட்டும் நம் நாடு வல்லரசாக மாறிவிடுமா? நமக்கு முதலீடும் மனிதவளமும் தேவைப்படுகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ட்ரம்ப்பின் வருகைக்காக காத்திருக்கும் தாஜ்மஹால்... பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு