உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் உயிரிழந்தனர் என அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குஜராத் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகமான பாதிப்பைச் சந்தித்துள்ள 3 மாவட்டங்கள் சிவப்பு குறியீடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிவப்பு குறியீடு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள அகமதாபாத் மாவட்டத்தில் இதுவரை 1,248 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இதன் தாக்கத்தை தடுக்கும் நோக்கில், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்து துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.
இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் ஊரடங்கு உத்தரவை முன்பைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை 100 விழுக்காடு அமல்படுத்தவும், அதை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யவும் குஜராத் மாநில காவல்துறை தலைவர் சிவானந்த் ஜா, காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரசின் வழிகாட்டுதல்களின்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்க காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நல்வாழ்விற்காக உழைக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு, நல்வாழ்வைப் பற்றி சிந்திக்க யாரும் இல்லாத நிலையே தொடர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் காவல்துறையினர் எவ்வளவு பாதுகாப்பானவர்கள் என்பதை அறிய ஈடிவி பாரத் முயன்றது.
இதனையடுத்து, ஈடிவி பாரத் செய்தியாளர் களத்தில் இறங்கி இது குறித்து ஆராயத் தொடங்கினார். நேரடியான கள ஆய்வாக, தலைநகர் அகமதாபாத்தில் உள்ள கல்பூர், தரியாபூர், கரஞ்ச், ஷாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களை கூர்ந்து கவனித்து வந்தனர். அங்கெல்லாம் சில காவல்துறையினர் மட்டுமே முகக் கவசம், கையுறைகளை அணிந்திருந்தனர்.
விசாரித்தபோது, முகமூடிகள் மற்றும் கையுறைகள் அரச நிர்வாகத்தால் சில காவலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாக, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்ய அவர்கள் அச்சப்படுகிறார்கள். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் மருத்துவ நிலை குறித்து அவர்கள் உறுதியாக தெரியாததால் பெருந்தொற்றுநோய் தங்களுக்கும் பரவிவிடுமோ என அவர்கள் எண்ணுவதில் காரணமில்லாமல் இல்லை.
முன்னதாக, ஷாப்பூர் காவல் நிலைய பகுதிக்கு அருகே கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பின்னர் கரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது நகர காவல் ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் தங்கள் கடமையை முழு அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருக்கும்போது, முறையான பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதைத் தவிர வேறொன்றையும் அவர்கள் கோருவதில்லை.
இதையும் படிங்க : காவல்துறையினர் தாக்கியதில் விவசாயி பலி! 6 பேர் சஸ்பெண்டு