கரோனா தொற்றுநோய் ஆனது, உலகப் போரில் ஏற்பட்ட அளவு பேரழிவை நமது கண் முன் நிறுத்துகிறது. இதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய நாடுகள், மிக அதிகமான மனித உயிரிழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த நாடுகளும்கூட கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
இவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளது. மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆறு வாரங்களுக்கு முன்பு ஊரடங்கைப் பிறப்பித்த இந்தியாவில், நாட்டின் பொருளாதார நிலைமையானது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதைப்போல் ஆகியுள்ளது.
பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, அரசுகளுக்குள்ள அரசமைப்புச் சட்ட ரீதியிலான கடமையாகும். கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் தங்களது ஆற்றல் முழுவதையும் மாநில அரசுகள் திரட்டிவருகின்றன. இத்தருணத்தில், நிதிப் பற்றாக்குறை என்ற திடீர் தடுமாற்றம் உண்மையிலேயே கடுமையான சவால்தான்.
மாநில அரசுகள் தாங்களே வசூலித்துள்ள வரி வருவாய் 46 விழுக்காடு ஆகும். வரியற்ற வருவாய் எட்டு விழுக்காடு ஆகும். மீதியுள்ள நிதியானது மத்திய வரிகளில் இருந்து கிடைக்கும் பங்கும் (26 விழுக்காடு), மானியங்கள் 20 விழுக்காடும் ஆகும். மாநில அரசுகளுக்கு உள்ள முக்கிய வருவாய் ஆதாரங்கள், அதாவது எஸ்ஜிஎஸ்டி (39.9 விழுக்காடு), உற்பத்தி (கலால்) வரி (11.9 விழுக்காடு), பத்திரப் பதிவு (11.2 விழுக்காடு) மற்றும் வாகன வரி (5.7 விழுக்காடு) ஆகியவை ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ளன.
தெலங்கானா அரசின் வருவாய் கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் கோடி. ஆனால் உண்மையிலேயே கிடைத்த வருவாய் ரூ.500 கோடி. உத்தரப் பிரதேச அரசுக்கு ஏப்ரல் மாதத்தில் இரண்டாயிரத்து 284 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் ஊதியங்கள் மற்றும் படிகளுக்காகவே அதற்கு ரூ.12 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.
இதுபோன்ற அசாதாரணமான போர் போன்ற சூழலில், வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையே உள்ள சமச்சீரற்ற நிலையைப் போக்குவதற்காக, தங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்ப்பது மிகவும் நியாயமானதே. பட்ஜெட் மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது வரி வசூலிப்பு மூலம் கிடைத்துள்ள வருவாய் மிகவும் குறைவாக இருப்பதால், மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பற்றாக்குறை நிலவுவது உண்மையிலேயே கவலைக்குரியது.
இந்த நிதிப் பிரச்னையில் இருந்து மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயம் மீட்க வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தில் கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற கோட்பாடு ஒரு நெறிமுறையாக ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளின் நிதிசார்ந்த தன்னாட்சி என்பது கானல் நீராகத்தான் இருக்கிறது. பதினான்காவது பொருளாதாரக் கவுன்சிலானது (நிதிக் கமிஷனானது) மாநில அரசுகள் வசம் 42 விழுக்காடு பங்குரிமை இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள போதிலும், அந்த அளவுக்கான நிதி அவற்றுக்கு வழங்கப்படவில்லை.
2017-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், மாநில அரசுகள் தங்களிடமிருந்த பெருமளவிலான வரி வசூலிப்பு அதிகாரங்களை, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மாற்றம் செய்தன. புதிய நெறிமுறைகளின்படி பதினைந்தாவது நிதிக் கமிஷன் என்ன செய்யப்போகிறது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியாத நிலையில், நிதிசார் பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாகச் சட்டம் (எஃப்ஆர்பிஎம்)- 2003-இன் கீழ், கடன்களை வாங்கும் கடமையை நிறைவேற்றுவதைத் தவிர மாநில அரசுகளுக்கு வேறு வழியில்லை.
கரோனாவின் விளைவாக, மத்திய அரசை விட மாநில அரசுகளின் நிதி நிலைகள்தான் கடுமையாகப் பாதிக்கப்படும் என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கடந்த நிதியாண்டின்போது வாட் மற்றும் விற்பனை வரி மூலம் ரூ. 3.26 லட்சம் கோடியும், உற்பத்தி வரியாக ரூ. 1.75 லட்சம் கோடியும், பத்திரங்கள் மற்றும் பதிவுகள் மூலமாக ரூ. 1.40 லட்சம் கோடியும் கிடைக்கும் என மாநில அரசுகள் மதிப்பீடு செய்திருந்தன.
கரோனா விளைவின் காரணமாக, அனைத்து மதிப்பீடுகளும் பயனற்றுப் போயின. இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தேவைப்படும் நிதியையும் அன்றாடச் செலவுகளையும் எப்படி எதிர்கொள்வது என்ற சிக்கலில் மாநில அரசுகள் உள்ளன. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைத் தருமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
நிதிகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தினாலும்கூட, மாநிலங்களுக்குப் போதுமான நிவாரணம் கிடைத்துவிட வாய்ப்பில்லை. எஃப்ஆர்பிஎம் சட்டத்தைத் திருத்துமாறும், கூடுதலாக இரண்டு சதவீத கடன் வழங்குமாறும் பல மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன. மாநில அரசுகளின் பொருளாதார நலனை மத்திய அரசு உறுதி செய்தால் மட்டுமே, கரோனாவுக்கு எதிராக அவை திறம்படப் போராட முடியும்.