தெலங்கானா மாநிலத்தின் முன்னணி செய்தித்தாள் நிறுவனம் ஈநாடு. இந்த நாளேட்டில் கடந்த வாரம் வெளியான ஒரு சிறுமியின் புகைப்படம் காட்டுத்தீ போல் வைரலானது. இந்தப் புகைப்படத்தை அவுலா ஸ்ரீநிவாஸ் என்பவர் எடுத்திருந்தார். அந்தப் புகைப்படத்தில், மோத்தி திவ்யா என்ற சிறுமி வகுப்பறைக்கு வெளியே நின்றுகொண்டு கையில் பாத்திரத்துடன் வகுப்பை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
அதற்கு 'பசிப் பார்வை' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தலைப்பு அந்தச் சிறுமியின் வாழ்க்கையில் அறிவுப் பசியையும் வயிற்றுப் பசியையும் போக்கும்வகையில் அமைந்தது. குப்பைத் தொழிலாளர்களுக்கு மகளாக பிறந்த மோத்தி திவ்யா, வறுமையின் பிடியால் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் குடிசை வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது பள்ளிக்கூடம்.
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் சிறுமி, மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த புகைப்பட செய்தியாளர் அவுலா ஸ்ரீநிவாஸ் அந்தச் சிறுமியை கவனித்துள்ளார். இதையடுத்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே அச்சிறுமி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகளின் உரிமைக்காகப் போராடும் மாமிடிபுடி வெங்கராங்கையா தன்னார்வ தொண்டு நிறுவனம் மோத்தி திவ்யாவின் பெற்றோரை அணுகி இதன் பின்னர் அதே பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். வயிற்றுப் பசிக்காக எட்டிப்பார்த்த பள்ளியில் சிறுமி கல்வி கற்பதைக் கண்டு அவரது பெற்றோர் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.