காந்திநகர்: குஜராத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதின் ஓவைசி பாரதிய பழங்குடிய கட்சியினருடன் கூட்டணி வைத்துள்ளார். இதற்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர்," வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த இரண்டு மாதங்களாக போராடி வரும் விவசாயிகளின் வலிகளை, பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகளை நடத்தும் விதம் சரியானதல்ல. போராடும் விவசாயிகளை பிரதமர் அவரது இல்லத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை உபசரித்தது போன்று உபசரிக்க வேண்டும். இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என எண்ணுகிறேன்.
ஏழை விவசாயிகள் உதவியற்ற நிலையில் தவிக்கின்றனர். அவர்கள் மீது அரசு அனுதாபப்படாமல் உள்ளது. நாங்கள் விவசாயிகளின் பக்கம் உள்ளோம். ஏனெனில் அவர்கள் எங்களது அன்னபூரணியாக உள்ளனர். எங்களுக்கு உணவளிப்பதற்காக மிகவும் உழைத்து வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.