கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பதவி வகித்த கமல்நாத்துடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தனது அதிருப்பதி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இதையடுத்து கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்தது, பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில், ஜோதிராதித்தியா சிந்தியா பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகவும், இதில் ஜோதிராதித்திய சிந்தியாவுக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் பிரதமருக்கு தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் காங்கிரஸ் அரசுகள் மட்டுமில்லாது, ஒட்டுமொத்த ஜனநாயகமும் ஆட்டம் கண்டுள்ளது. இந்தச் சூழலில் கட்சி தாவிய சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சரவையில் இடம் தராமல், ஜனநாயக மாண்பை பிரதமர் காக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் மூலம் தனது முன்னாள் சகாவான ஜோதிராதித்யா சிந்தியாவை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் கமல்நாத்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் முதலீடு செய்யக்கோரி சுந்தர் பிச்சைக்கு அழைப்பு