கரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளி வைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தினால் 28 லட்சம் மாணவர்கள் கரோனாவால் பாதிக்க வாய்ப்பு உருவாகும் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாற்ற வழிமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். கரோனா பரவலை தடுக்க தேர்வின்போது தேவையான வழிமுறைகள் பின்பற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், அரசு வகுத்த வழிமுறைகளை பின்பற்றியதால்தான் லட்சக்கணக்கான இந்தியர்கள் கரோனாவால் பாதிப்படைந்தனர்.
பாதுகாப்பான சூழலில் இருந்தபோதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும் நாட்டின் முக்கிய தலைவர்கள் கரோனாவால் பாதிப்படைந்தனர். இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற சூழலில் 28 லட்சம் மாணவர்களை எப்படி தேர்வு மையத்திற்கு அனுப்பு முடியும்" என்றார்.
இதற்கிடையே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்கைக்காக போரிடும்போது எதிர்ப்பு கிளம்புவது இயல்பு - கபில் சிபல்