குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
குறிப்பாக, டெல்லியிலுள்ள ஷாகீன் பாக் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவந்தது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், துப்பாக்கிச் சூடு சம்பவமும் அங்கு நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள் கிழமை மாலை ஷாகீன் பாக் பகுதியில் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், இதுவரை காவலர் ஒருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தால் டெல்லி முழுவதும் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
இதையடுத்து, இந்த வன்முறை சம்வம் தொடர்பாக ஆலோசிக்க இன்று காலை உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் ஏற்பட்டுள்ள வன்முறையை நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இது தொடர்பாக ஆலோசிக்க உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது, இது ஒரு நல்ல தொடக்கம்.
டெல்லியில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உதவுவதாக தெரிவித்துள்ளனர்" என்றார்.
மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தேவைப்பட்டால் அழைப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், தற்போது காவல் துறையினரே அனைத்து நடவடிக்கையும் எடுத்துவருகின்றனர். பாதுகாப்பு பணியில் போதிய காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எங்களுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: 'டெல்லி வன்முறை... பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட விருப்பம்'