ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்திலுள்ள தந்தா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படை வீரர்கள் கண்ணில் சிக்கினார்.
இந்நிலையில் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட தொலைவு விரட்டிச் சென்று கைது செய்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் தன்வீர் மாலிக் என்பதும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைக்கு மாநில காவல்துறையினர் பெரிதும் உதவினர். இருவரின் முயற்சியால் இந்த கைது நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தன்வீரை காணவில்லை என தோடா மாவட்ட காவல்நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்வீரிடம் ஆயுத தடைச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.