விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நாக்பூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், பாரதத்தின் அடையாளமான இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது எனவும், அதன்படி இந்துஸ்தானை அமைக்க உழைப்போம் எனவும் கூறினார். மோகன் பகவத்தின் இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் அவர், ”இந்துக்களின் மேலாதிக்கத்தின் அடிப்படையில் இந்து ராஷ்டிர சிந்தனை உருவாகிறது. இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தவர்களை அடிபணியச் செய்வதே இச்சிந்தனையின் அடிப்படை நோக்கம். மேலும், சிறுபான்மையினர்கள் இந்தியாவில் வாழ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை மறைமுகமாக இதன்மூலம் நமக்குத் தெரிவிக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாம் அனைவரும் இந்தியர்கள். இந்து ராஷ்டிரா என்பது கற்பனை விமானம்; அது எப்போதும் உருவாகாது” என்று கூறியுள்ளார்.