சுமார் ஆயிரம் பல்கலைக்கழகங்கள், சுமார் 40 ஆயிரம் கல்லூரிகள், 11 ஆயிரத்து 500 கல்வி நிறுவனங்கள் என இந்திய உயர் கல்வி பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமானது. ஆனால் அதன் தரத்தை ஆராய்ந்தால் அது எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பது வெளிப்படும்.
ஆராய்ச்சிகள், பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களையும் சேர்த்தாலும் அவை பிரிட்டனின் ஒரு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கோ, அல்லது அமெரிக்காவின் ஒரு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திற்கோ இணையானவை அல்ல.
இந்தியாவில் பல்கலைக்கழக அமைப்பு எந்த அளவிற்கு ஒழுங்கற்றதாய் இருக்கிறது என்பதை இது வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகார கவுன்சிலின் (என்.ஏ.சி.) சமீபத்திய ஆய்வு முடிவு, இது குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கல்வித் தரம், கற்பித்தல் தரம், ஆராய்ச்சி போன்றவை பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை. ஏனெனில் பிரச்னை வேர் வரை சென்றுள்ளது. நாடு முழுவதிலும் 600 பல்கலைக்கழகங்களும், 25 ஆயிரம் கல்லூரிகளும் அங்கீகாரம் பெறாத நிலையில் உள்ளதாகக் கூறுகிறது என்.ஏ.சி.
அங்கீகார செயல்முறையை எதிர்கொள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களும் ஏதாவது காரணங்களைக் கூறிக் கொண்டிருப்பதாக அது கூறுகிறது. தரமதிப்பீட்டிற்கான என்.ஏ.சி.யின் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் எங்கே தங்கள் கல்வி நிறுவனங்களின் தரமற்ற செயல்பாடு அம்பலமாகிவிடுமோ என்று தங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் 22 விழுக்காட்டினர் அஞ்சுவதாக என்.ஏ.சி. தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்றவர்களில் 72 விழுக்காட்டினர் தங்கள் செயல்திறனை மேம்படுத்த தீவிரமாக முயற்சி செய்வதாகத் தெரிவித்ததை என்.ஏ.சி. சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இரண்டாயிரத்து 500 உயர்கல்வி நிறுவனங்களில் 800-க்கும் குறைவான உயர்கல்வி நிறுவனங்களே அங்கீகாரம் பெறத்தக்க நிலையில் உள்ளன. கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி ஆகியவற்றில் தொடர்ச்சியான தர மேம்பாட்டிற்காகப் பாடுபட வேண்டிய உயர்கல்வி நிறுவனங்கள் அவற்றை மேற்கொள்வதற்குப் பதிலாக, சான்றிதழ்களை வழங்கும் மையங்களாக தங்களைச் சுருக்கிக் கொண்டு அதிலேயே திருப்தி அடைந்துவருகின்றன. போக்கு எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.
நாட்டை நிர்மாணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய உயர்கல்வி, தரம் குறைந்த கற்பித்தல், ஆராய்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தரங்களைப் பூர்த்திசெய்யத் தவறினால், என்.ஏ.சி.யின் அங்கீகாரத்தைப் பெற இயலாது. இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பல கல்லூரிகளில் உள்கட்டமைப்பு மோசமானதாக உள்ளது. மின் கற்றல் வசதியும் சரியாக இல்லை. இதன்மூலம் அவை, என்.ஏ.சி. வகுத்துள்ள குறைந்தபட்ச தரக்கட்டுப்பாட்டிற்குக்கூட இணங்கவில்லை என்பது உறுதியாகிறது.
இருப்பினும், பெரும்பாலான அரசு கல்லூரிகள், அங்கீகாரம் பெறுவதற்கான கட்டணமான மூன்றரை லட்சம் ரூபாயை, 18 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியுடன் கட்ட தயாராக இருக்கின்றன. பல மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாகக் குழுக்கள் இல்லை. பல ஆண்டுகளாகத் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. நிதி பற்றாக்குறை உள்பட பல்வேறு சிக்கல்களால் அவை பாதிக்கப்பட்டுள்ளன.
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற விரும்பும் பல்கலைக்கழகங்கள், திறமையான கல்வியாளர்களை பேராசிரியர்களாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். இதற்கு நிதி ஆதாரங்கள் போதுமான அளவு இருக்க வேண்டும்.
உலகத்தரமிக்க முதல் 10 பல்கலைக்கழகங்களை எடுத்துக்கொண்டால், அவை நவீன, திறன்மிக்க கற்பித்தலிலும், உயர்தரங்களைப் பேணுவதிலுமே குறியாக இருக்கின்றன. அதன் காரணமாகத்தான் அவற்றால் 800-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்க முடிந்துள்ளது.
ஆனால், இதற்கு மாறாக, திறமையான கல்வியாளர்களைத் தேர்வுசெய்வதிலும், சிறந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், நிதி ஒதுக்கீட்டிலும் காட்டப்படும் அலட்சியம் காரணமாக, தேசிய அளவில் 90 விழுக்காடு கல்லூரிகளும், 70 விழுக்காடு பல்கலைக்கழகங்களும் தரமற்ற கல்வியை அளிக்கக் கூடியவையாகவும், வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான தகுதியற்றவர்களை உருவாக்கும் மையங்களாகவும் மாறியிருக்கின்றன. உள்நாட்டின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கே போராடும் இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களால், எவ்வாறு சர்வதேச அளவில் போட்டியிட முடியும்?
தற்போதைய நிலையை படிப்படியாக மேம்படுத்த வேண்டும் என்றால், ஆரம்பக் கல்வியில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தரமான மனித வளங்களுக்கான அத்தியாவசிய முதலீடாக உயர்கல்வி அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குத் தகுதிவாய்ந்த கல்வியாளர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அர்ப்பணிப்பும் உறுதியும் மிக்க கல்வி நிறுவனங்கள் அவசியம்.
இதையும் படிங்க: கோவிட்-19: விடை கிடைக்காத ஏராளமான வினாக்கள்! பதில் தேடும் சிறப்புத் தொகுப்பு...