கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் வந்தது. மதுபானக் கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களில் ஏற்பட்ட வருவாய் இழப்பைச் சரிசெய்ய மதுபானத்திற்கு கரோனா வரி வசூலிக்க மாநில அரசு முடிவுசெய்தது. ஆரம்பத்தில் கடைகள் திறந்தவுடன் ஆர்ப்பரித்த மதுப்பிரியர்கள் கூட்டம், நாள்கள் செல்லச் செல்ல குறையத் தொடங்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஏபிசி), "வருவாய் இழப்பைச் சரிசெய்ய மதுபானத்திற்கு விலையேற்றிய மாநிலங்களின் யோசனை தோல்வியில் முடிந்துள்ளது. 1 முதல் 15 விழுக்காடு வரை வரி அதிகமாக வசூலித்த மாநிலங்களில், 16 விழுக்காடு மதுபான விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.
அதே சமயம், 50 விழுக்காடுக்கு மேல் கரோனா வரி வசூலித்த மாநிலங்களில் 59 விழுக்காடு மதுபான விற்பனை சரிவடைந்துள்ளது. மே, ஜூன் மாத மதுபானம் விற்பனையை ஒப்பிடுகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பேசிய சிஐஏபிசி இயக்குநர் வினோத் கிரி கூறுகையில், " வரி அதிகரிப்பு மாநிலத்தின் மொத்த வருவாயை அதிகப்படுத்தாது என்பது தெளிவாகத் தெரிகிறது. தளர்வு அறிவித்து விற்பனை தொடங்கியபோது, குறைந்த வரி உள்ள மாநிலங்களில் மதுபான விற்பனை அதிகளவில் இருந்தது. ஆல்கஹால் என்றாலும் விலை முக்கியம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அதிக வரிகளை வசூலிப்பதற்கான அரசாங்கங்களின் விருப்பம் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், ஒருகட்டத்திற்கு மேல் உயர்த்தக்கூடாது. இத்தகைய செயல் விற்பனையை பாதிப்பது மட்டுமின்றி, குறைவான வரி கொண்ட மதுபானத்தை தேடிதான் மக்களை செல்ல வைக்கும்" என்றார்.