பருவமழை காரணமாக கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளன. இந்தாண்டில், மூன்றாவது முறையாக பெய்த கன மழையால் பயிர்கள், பொது சொத்துகள் பெரும் சேதமடைந்துள்ளன.
இதேபோல் சென்ற ஆகஸ்ட் மாதம், வட கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மொத்தமாக, 4.60 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதன் மூலம் 6,009 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டது.
கனமழை காரணமாக 21,173 கிமீ சாலை சேதமடைந்துள்ளதன் மூலம் ரூ.2 ஆயிரத்து 428 கோடி இழப்புஏற்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 2 ஆயிரத்து 758 பாலங்கள் சேதமடைந்ததன் மூலம் ரூ.460 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
13 ஆயிரத்து 573 வீடுகளும் மூன்று ஆயிரத்து 669 அரசு கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளன. உள்கட்டமைப்பு பாதிப்பின் மூலம் மூன்று ஆயிரத்து 260 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் 344 விலங்குகளும் செப்டம்பர் மாதத்தில் 495 விலங்குகளும் உயிரிழந்துள்ளன. இதன்மூலம், மொத்தம் நான்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய தெலங்கானா - மூன்று பேர் உயிரிழப்பு!