தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்தது. 100 ஆண்டுகளில் அதிகப்படியான மழையை ஹைதராபாத் இந்த மூன்று நாட்களில் சந்தித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த தொடர் கனமழையால் பல்வேறு முக்கியச் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டு குளம்போல் காட்சியளித்தன. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.
இந்தத் தொடர் கனமழையால் போக்குவரத்து காவல் துறையினரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டனர். ஹைதராபாத்திலுள்ள தாழ்வான பகுதிகளும் தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
நாச்சாரம் காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கு சிறிது நேரம் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கோஷமஹால் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியிலும் மழைநீர் புகுந்தது. இந்தத் தொடர் மழை காரணமாக சாலைகளில் மரங்கள் முறிந்துவிழுந்தன.