கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் குடிபெயர் தொழிலாளர்கள் பலரும் சொல்லில் அடங்கா பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
வேலையிழந்து, வாழ்வாதாரமிழந்து, உணவின்றி, சொந்த ஊர் திரும்ப வாகனமின்றி வெறும் கால்களுடனும், சாலையில் இறந்து கிடக்கும் விலங்கின் சடலத்தை உண்ணும் மனிதர்களையும், எப்படியேனும் சொந்த ஊர் திரும்பும் முனைப்பில் இருந்த பலர் விபத்தில் சிக்கி இறந்த செய்திகளும் நாளுக்கு நாள் வந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் குடிபெயர் தொழிலாளர்கள் சாரைசாரையாக நடந்துசெல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய பிஞ்சுக் குழந்தை ஒன்று கொதிக்கும் கோடை வெப்பத்திலும் காலணிகூட இன்றி பெற்றோர்களின் மனநிலை குறித்தும், அரசின் பொறுப்பற்ற செயல்கள் குறித்தும் அறியாமல் வெற்றுக்கால்களுடன் நடந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இதுபோன்ற காணொலிகள் அரசின் கவனத்தை குடிபெயர் தொழிலாளர்களின் பக்கமும், அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை செய்துதரும் பொருட்டும் மாற்றும் சக்தியற்று உள்ளனவா என்ற சந்தேகத்தையே இவை எழுப்புகின்றன.