உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அண்மையில், மூளைச்சாவு ஏற்பட்ட 20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
உறுப்புகள் தானத்தை விட, அதை சரியான நேரத்தில் கொண்டு செல்வது சவாலான ஒன்றாகும். வெளிநாடுகளில் ஹெலிகாப்டரில் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டாலும், இங்கு அத்தகைய வசதி இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் அமலுக்கு வரவில்லை.
'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில் கார் அல்லது ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் நிலை தான் இங்கு உள்ளது. அத்தகைய, இக்கட்டான சூழ்நிலையில் காவல் துறையின் ஓத்துழைப்பினால் உரிய நேரத்தில் உறுப்புகளை ஓட்டுநர்களால் கொண்டு செல்ல முடிகிறது. அந்த வகையில், ஹைதராபாத்தில் அரை மணி நேரத்தில் இதயத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்காக, மெட்ரோ ரயிலின் உதவியை மருத்துவமனை நாடியுள்ளது.
21 கிமீ தொலைவில் மருத்துவமனை
நல்கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்திட குடும்பத்தினர் முடிவு செய்தனர். அப்போது, ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு இதயம் உடனடியாக தேவைப்படுவது தெரியவந்துள்ளது.
உடனடியாக இதயத்தை கொண்டு செல்லும் பணியில் எல் பி நகர் காமினி மருத்துவமனையில் உள்ள மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், மருத்துவமனை 21 கிமீ தொலைவில் உள்ளதால் குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்ற நிலைமை வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மெட்ரோவின் உதவியை மருத்துவமனை நாடியது.
களத்திலிறங்கும் மெட்ரோ
மெட்ரோ ஊழியர்கள் உடனடியாக வழிதடத்தை சீர்செய்து, அதிவேகமாக இதயத்தை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டனர். சாதரணமாக 21 கிமீ சென்றடைய 60 நிமிடங்கள் ஆகும் பட்சத்தில், மெட்ரோவில் அரை மணி நேரத்தில் கொண்டு சென்றனர்.
முதன்முறையாக, ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பச்சை வழித்தடம் உருவாக்கப்பட்டது. டாக்டர் கோகலே தலைமையிலான குழுவினர், வெற்றிகரமாக இதயத்தை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த திகில் பயணத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.