இந்திய வரலாற்றில் மிக முக்கிய வழக்குகளில் அயோத்தியா வழக்கும் ஒன்று. மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு பல திருப்பங்களை சந்தித்துள்ளது. கடந்த 40 நாள்களாக நடந்துவந்த இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், மத்தியஸ்தர் குழுவின் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு மேலும் கால அவகாசம் கேட்டு வழக்கறிஞர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், போதுமான கால அவகாசம் தந்தாகிவிட்டது என தலைமை நீதிபதி மறுத்திருந்தார்.
முக்கியமாக இன்று நடந்த விசாரணையின்போது, இஸ்லாமிய அமைப்புக்கு ஆதரவாக வாதாடிய ராஜீவ் தவான், நீதிபதிகளின் அனுமதியோடு வரைபடத்தில் ராமர் பிறந்த இடம் என குறிப்பிடப்பட்டிருந்த வரைபடத்தை கிழித்தெறிந்தார். முன்னதாக, இந்து அமைப்பு இந்த வரைபடத்தை ஆதரமாக அளித்தபோது, இதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.
வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறும் நாளான நவம்பர் 17ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.