புதுச்சேரியில் கரோனா நோயாளிகளுக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதில், கதிர்காமம் கரோனா வார்டில் சுகாதார சீர்கேடு இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிர்காமம் மருத்துவமனையில் கரோனா நோயாளியாக சிகிச்சைப் பெற்று வரும் நபர் ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “மருத்துவமனையில் கழிவறை தூய்மையாக இல்லை, இரண்டு கழிவறை மட்டும் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவின் கவனத்துக்கு சென்றது.
இதையடுத்து அவர் சம்மந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். அப்போது, வீடியோ வாயிலாக புகார் தெரிவித்த நாகராஜ் என்பவரையும் சந்தித்தார்.
அவரின் குறைகளை கேட்டறிந்த பின்னர், இது போன்ற புகார்கள் வராத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நாகராஜ் மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.