கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான திருமண நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் நடைபெறவிருந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகனின் திருமணம், ராமநகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை குமாரசாமியின் ஊடகச் செயலாளர் கே.சி. சதானந்தா உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமானவர்கள் ஆகியோர் மட்டும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, திருமணத்தை பெங்களூருவில் நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், பெங்களூருவில் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், திருமணத்தை பண்ணை வீட்டில் நடத்தவுள்ளோம்" என்றார்.
இன்று திருமணம் நடைபெறவுள்ள நிலையில், குமாரசாமியின் மகன் நிகிலுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் மகள் ரேவதிக்கும் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செய்தியாளர்களைச் சந்திக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர்!