2012 மார்ச் 24ஆம் தேதியன்று, அமராவதி மாவட்டம் ராஜபேத் காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட சுனபட்டி பகுதியில் ஒரு வழிப்பாதையில் வந்த அமைச்சர் யசோமதி தாக்கூர் வாகனத்தை அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் நிறுத்தியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த யசோமதி தாக்கூர், அவரது ஓட்டுநர், அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேர் அந்தக் காவலரை பலமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் யசோமதி தாக்கூர், ஓட்டுநர், ஆதரவாளர்கள் இருவர் என நான்கு பேருக்கும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கியும், அபராதமாக நான்கு பேரும் தலா ரூ.15,500 செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக அமைச்சர் யசோமதி தாக்கூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த இடைக்கால தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதி வினய் ஜோஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, "இவ்வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது. அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.