மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஜார்க்கண்ட் தற்போதைய முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது பெண் ஒருவர் 2013ஆம் ஆண்டு பெருநகர நீதித்துறை நடுவரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அதே ஆண்டு சம்பந்தப்பட்ட பெண் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக பாந்ரா நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்தார். அதன்பேரில், வழக்கை வாபஸ் பெற நீதிபதிகள் அனுமதித்தனர்.
இதற்கிடையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சம்பந்தப்பட்ட பெண் மும்பை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் விபத்து ஒன்றை சந்தித்தேன், இந்த விபத்துக்கு பின்னால் ஹேமந்த் சோரன் இருக்கலாம், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்குரைஞரை மனுதாரர் மாற்றினார். இதற்கிடையில் வழக்கை வாபஸ் பெறப்போவதாக மீண்டும் கூறி அதிர்ச்சி அளித்தார். இதற்கு நீதிபதிகள் சம்மதிக்கவில்லை.
இதற்கு மத்தியில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மாநில வழக்குரைஞர் தீபக் தாக்கரே கூறியிருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, மணீஷ் பிதாலே பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்றைய தினத்துக்குள் வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புகாரளித்த பெண்ணுக்கு மனுவை வாபஸ் பெற அனுமதி அளிக்க முடியாதது என்றும் கூறினர். ஆகவே, இந்த வழக்கு பிப்ரவரி 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்பு